Skip to main content

மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Admission Rally in Corporation School

திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளி பாண்டமங்கலம் தெற்கு பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இதை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மல்லிகா பெரியநாயகி மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர்  ஜான்சி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை லீலா லெட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்

உதவி ஆசிரியைகள், எஸ்.எம்.சி. உறுப்பினர்கள், பி.டி.ஏ. உறுப்பினர்கள், ஐ.டி.கே தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர்.  2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை துவங்கப்பட்டது. எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை நடைபெற இருப்பதால் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற்று பயனடையுமாறு தலைமை ஆசிரியை லீலா லட்சுமி கேட்டுக் கொண்டார் முடிவில் உதவி ஆசிரியை தஸ்லீம் பல்கீஸ் நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.