சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த ஆனந்த் வெங்கடேஷ், கடந்த கால ஆட்சியின் போது அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தார். அந்த வகையில் கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியின் போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் இருந்து வளர்மதி விடுவிக்கப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவிக்கையில், “கீழமை நீதிமன்றங்களின் செயல்களைப் பார்க்கும் போது நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாகப் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ஒத்தி வைக்க வளர்மதி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கு எதிரான வழக்கை நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.