தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது.
இந்நிலையில், பிரபல நிறுவனமான 'அடிடாஸ்' முதல் முறையாக தமிழகத்தில் சென்னையில் கால்பதிக்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. சீனாவுக்கு பிறகு அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கால்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.