சென்னை எழும்பூர் பகுதியில், பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். மேலும், இதில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டில் அந்த இனப்படுகொலை நடக்கிறது. காஷ்மீரில் நடந்தது மட்டும் இனப்படுகொலை கிடையாது. அங்கு மொத்தமா வெட்டுனாங்க.. உயிருக்கு பயந்து எல்லோரும் வெளியே வந்தார்கள். தமிழ்நாட்டில், பல பத்தாண்டுகளாக அறுபது ஆண்டுகாலங்களுக்கு மேலாக நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலை தான். பிராமணர்களின் உணர்வை அழிப்பதும் இனப்படுகொலை தான். ஒருவரின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அழிப்பதற்கான சமம் தான். எனக்கு அதில் ரொம்ப பயமாக இருக்கிறது.
ஆளுங்கட்சியினருக்கு நாளைக்கு கல்யாணம் செய்வதற்கு பிராமண பெண்கள் எப்படி கிடைப்பார்கள்?. நீங்கள் எங்கள் இனத்தை அழித்து, அடையாளத்தை அழித்தால் எப்படி பிராமண பெண்கள் இருப்பார்கள்?. யார் இறந்தாலும், கருமாதி செய்வதற்கு பிராமணர்கள் இருப்பார்களா? என்ற கவலை வந்திருக்கிறது. இந்த கவலை, இந்து சமுதாயத்தின் கவலை. பிறப்பதில் இருந்து இறப்பது வரை ஒவ்வொரு இடத்திலும் இன்றியமையாது அங்கமாக வகிக்க வேண்டிய ஒரு குலத்தை அழிக்கிறார்கள். திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கையாக இருக்கிறது. அதற்கான சார்ந்த கொள்கை தான் பிராமண எதிர்ப்பு. கடவுள் இருக்கிறது என்று சொன்னால், இந்து சமுதாயம் ஒன்றுபட்டே இருக்குமே என்ற காரணத்தினால் தான் கடவுள் மறுப்பு பேசுகிறார்கள்.
ஒருவன், மற்றவனை ஒடுக்கினான், இழிவுப்படுத்தினான், என ஒவ்வொரு இடத்திலும் பொய்யான கதைகளை புணைந்து பேசுகிறார்கள். ஆரியர்களை, வந்தேறிகள் என்று சொல்கிறார்கள். யார் வந்தேறிகள்?. எப்பொழுதோ வந்த பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என்று சொல்ல, நீங்கள் யார்?. நீங்கள் யார் தமிழர்கள்?. பிராமணர்கள் தமிழர்கள் இல்லையென்றால், வேறு யார் தமிழர்கள்?. அதனால், தானே ஒருத்தர் கூட தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க முடியவில்லை. நான் ஹைதராபாத்தில் தான் நான்கு வருடமாக இருக்கிறேன். நீங்கள் திராவிடர்களா என்று அவர்களை கேட்கும்போது, என்னது என்று கேட்கிறார்கள். உங்களை விட அதிகமாக தெலுங்கு பேசுகிறவர்கள் எங்க ஊர்ல தான் அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் சொன்னபோது, அப்படியா என்று பெருமையா கேட்கிறார்கள். அப்படி இங்கு ஐந்து பேர் அமைச்சரவையில் இருக்கிறார்கள்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று திருமா சார் கேட்டார். அவர் தெரிந்து சொன்னாரோ, தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. ஆதிக்குடிகளான பறையர்களுக்கு தான் பங்கு கிடையாது. தெலுங்கு பேசினால், பங்கு நிறைய கொடுக்கிறார்கள்” என்று பேசினார்.