
வாணியம்பாடியில் மின்கம்பம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் பயின்று வரும் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கல்லூரி முடிந்து காரில் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த நவ்மான், பெரியாங்குப்பம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நியாமத்துல்லா, கிஷோர், முஜம்மில், வாசிப், புர்கான் உள்ளிட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் கிராமிய போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் நவ்மான் (19)உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கல்லூரி முடிந்து காரில் வீடு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.