வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், இராணிப்பேட்டை என பிரிக்கப்பட்டாலும், சில துறைகள் இன்னும் ஒருங்கிணைந்த துறையாகவே உள்ளது. அதில் முக்கியமானது வேளாண்மைதுறை. வேளாண்மை துறை சார்பில், பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் இருந்து மைய அரசு 5 ஏக்கர்க்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இது 4 மாதத்துக்கு ஒருமுறை 2 ஆயிரம் வீதம் வழங்குகிறது. இதனை ஒவ்வொரு மாநில வேளாண்மை துறை முன்னின்று வழங்கிவருகிறது.
![Aadhaar number error issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/qJQpw5_tJXMti1BwGqyZFIiRFU1-Ann5Yewrp1MBB64/1579783928/sites/default/files/inline-images/1111111_34.jpg)
கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்படி முதல் தவணை வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல விவசாயிகளுக்கு விவசாய உதவித்தொகை வரவில்லை என்கிற குற்றச்சாட்டினை விவசாய சங்கங்கள் எழுப்பியுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் இரண்டு கட்டம் நிதி வழங்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்ட நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் சிறுகுறு விவசாயிகள் வழங்கிய வங்கி எண் மற்றும் பெயருக்கும் – ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது. இப்படி இந்த மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரத்து 402 விவசாயிகளின் ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் – வங்கி கணக்கில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் உள்ளதால் நிதியுதவி வங்கி கணக்கில் செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அதனால் விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்துக்கு சென்று ஆதார் எண்ணை சரியாக பதிவு செய்ய வேண்டும், தவறுகளை திருத்த வேண்டும், அப்போதுதான் மூன்றாம் கட்ட நிதியுதவி கிடைக்கும்" என அறிவித்துள்ளார்.