
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, இபிஸ் மற்றும் ஓபிஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தி வந்தனர். அதன் பின்னர், நடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனியாக அணி ஒன்றை திரட்டி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கடந்த 14ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “'நீங்கள் (ஓபிஎஸ்) அ.தி.மு.கவிற்கு இடையூறு பண்ணாதீர்கள். உண்மையிலேயே அ.தி.மு.கவில் இணைய வேண்டும் என ஓபிஎஸ் நினைத்தால் ரகசியமாகச் சொல்லிவிடுங்கள். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என அவசியம் கிடையாது. அவர் உண்மையிலேயே அ.தி.மு.கவில் சேர வேண்டும், அதிமுக வெற்றிபெற வேண்டும், அ.தி.மு.கவை காக்க வேண்டும் என்றால் எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொள்வதை அவர் சொல்லிவிட வேண்டும்.

பேப்பரில் செய்தி கொடுத்து தர்மம் வெல்லும்; சூது வெல்லும்; இது வெல்லும்; அது வெல்லும் என்று விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். அ.தி.மு.க வளர வேண்டும் என நினைத்தால் வழக்கு மன்றத்திற்கு போகவே கூடாது. ஆறு மாதம் பொறுமையாக இருங்கள். எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் போய் கேட்டு, ‘நல்லா இருக்கிறார் சேர்த்துக்கொள்வோம்’ என்று கேட்கிறோம். இதுதான் எங்களால் செய்ய முடிந்த நன்மை. துணிச்சலாக சொல்கிறோம்” என தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த நிலையில், ராஜன் செல்லப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள், இணைய வேண்டும் என்று தான் நான் சொன்னேன். என்னை அழைத்துக் கொண்டு போய், யாரிடமோ சேர்க்க வேண்டும் என்று இதுவரை நான் சொன்னதே கிடையாது. சொல்லவும் மாட்டோம். ராஜன் செல்லப்பா இதை புரிந்துகொள்ள வேண்டும். எனக்காக யாரும், பரிந்து பேச தேவையில்லை. எங்களை எல்லாம் சிபாரிசு செய்வது மாதிரியான தொனியில் அவர் பேசியிருப்பது அவருக்குரிய அழகல்ல” என்று தெரிவித்தார்.