முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “6 பேர் சம்பந்தப்பட்ட தீர்ப்பு மிகவும் கண்டனத்திற்கு உரியது. உச்சநீதிமன்ற தீர்ப்பு கவலை அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு மத்திய அரசின் இரட்டை வேடத்தின் வெளிப்பாடாகப் பார்க்கிறோம். மத்திய அரசின் வழக்கறிஞர்கள் யாரும் இல்லாமல் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழக்கறிஞர்கள் கடந்த 3 வருடங்களாக எடுத்து வந்த நிலையிலிருந்து ஏன் இந்த மாற்றத்தைச் செய்தனர். 6 பேரில் 3 பேர் இலங்கையைச் சார்ந்தவர்கள். இலங்கை குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் அகதிகள் கிடையாது. அப்படியென்றால் அந்த மூவரும் இந்தியாவில் தீவிரவாத குற்றத்தால் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களை எங்கு அனுப்பப் போகிறார்கள். அவர்களை இந்தியாவில் வைத்திருக்கப் போகிறோமா அல்லது இலங்கைக்கு அனுப்பப் போகிறோமா என்ற நிலையை எடுக்காமல் மத்திய அரசு பயந்தோடியது ஏன்?” எனக் கூறியுள்ளார்.