Skip to main content

சொத்துத் தகராறில் தம்பியைக் கொலை செய்த அண்ணன்...

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

கொலைசெய்யப்பட்ட குழந்தை வேலு - கோகிலா
                                   குழந்தை வேலு   -   கோகிலா

 

அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட சொத்துத் தகராறில் தம்பி மற்றும் அவரது மனைவியை அண்ணன் கொலை செய்துள்ள சம்பவம் கடலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவட்டி ஊரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன்கள் சாமிநாதன் (70), குழந்தைவேலு (60). அண்ணன் தம்பிகளான இவர்கள் தச்சுத் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களிடையே தந்தையின் சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

 

இந்தநிலையில் சாமிநாதன் பெங்களூரில் தங்கி தச்சு வேலை செய்து வந்துள்ளார் தற்போது கரோனா தடை உத்தரவு காரணமாக தனது சொந்த ஊரான ஆவட்டியில் வந்து தங்கியுள்ளார் நேற்றிரவு சாமிநாதன் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த தனது தம்பி குழந்தைவேலுவிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்து பிரச்சனை ஏற்படுத்தியுள்ளார். இந்தத் தகராரில் யாரும் எதிர்பாராத நிலையில் சாமிநாதன், அரிவாளால் குழந்தைவேலுவை வெட்டியுள்ளார். அப்போது குழந்தைவேலுவின் மனைவி கோகிலா தடுத்துள்ளார். சாமிநாதன் கோகிலாவையும் வெட்டியுள்ளார். இதில் குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அவரது மனைவி கோகிலா திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

 

சம்பவம் பற்றி அறிந்ததும் ராமநத்தம் காவல்துறை ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். குழந்தைவேலுவைக் கொலை செய்த சாமிநாதன் தனது வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கம் பூட்டி கொண்டிருப்பது காவலர்களுக்கு தெரியவந்தது. வீட்டின் கதவை உடைத்து சாமிநாதனைச் சுற்றி வளைத்து, கைது செய்துள்ளனர்.

 

கொலையான குழந்தைவேலு உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட குழந்தைவேலுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் ஆகவில்லை. தச்சுத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி சொத்து பிரச்சினையில், தம்பியைக் கொலை செய்த அண்ணனின் செயலைக் கண்டு அவ்வூர் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சாமிநாதன் ஏற்கனவே பெங்களூருவில் இருக்கும்போது அவரது மனைவியைக் கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று வந்தவர் என்று கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்