Skip to main content

18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; திமுக எம்.எல்.ஏ. அஞ்சலி (படங்கள்)

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

 

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இதே நாள் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா உட்பட 14 நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை ஒட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு தலைமையில் பொதுமக்கள் சுனாமியில் இறந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story

“மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவு” - திருமாவளவன் கண்டனம்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Thirumavalavan MP condemns the beaten kallakurichi student issues

“மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” எனப் பட்டியலின மாணவி மீது நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவி நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். வீட்டு உரிமையாளர் அன்டோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவியை குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

வீட்டு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே பல மாதங்களாக மாணவிக்கு சம்பளம் வழங்காமலும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் அடித்துத் துன்புறுத்திக் கொடூரமாக வதைத்துள்ளாரென்று தெரியவருகிறது. இது மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஈவிரக்கமற்ற இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி, கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்து மருத்துவராகும் கனவுடன் உழைத்திட வீட்டுப் பணியில் சேர்ந்துள்ளார். உழைத்துச் சம்பாதித்துப் படிக்கத் துடிக்கும் ஒரு ஏழைச் சிறுமியை ஊக்கப்படுத்த வேண்டிய பக்குவம் இல்லாமல், நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் இவர்களின் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கணவன் தனது மனைவியை அடிக்கவோ, பெற்றோர் தமது பிள்ளைகளை அடிக்கவோ, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ கூடாது என்கிற 'மனித உரிமை' குறித்த விழிப்புணர்வு, உலகெங்கும் வளர்ந்துள்ள இக்காலச் சூழலில், இவர்களால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ளமுடிகிறது என்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. மாணவியை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி அந்த மாணவி கதறுவது நெஞ்சை உலுக்குகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பதினெட்டு வயதுக்கும் கீழாகவுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றச் செயல்களைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தழுவிய அளவில் இது குறித்து விரிவான புலனாய்வை மேற்கொள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.