![](http://image.nakkheeran.in/cdn/farfuture/RN26yhnGSCrjlFuyrKH76VxTN8BYtbHRzj86hkpRIQs/1533347688/sites/default/files/inline-images/vimala.jpg)
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், மூன்றாவது நீதிபதியாக நீதிபதி விமலாவுக்கு பதிலாக சத்தியநாராயணனை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து அனைவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதனால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக விமலா விசாரிக்க உள்ளார்.
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/MnsoTC7GUVwIcppkMORD0mvAX5rftH4D32oK1LjE0Hk/1533347634/sites/default/files/inline-images/Supreme_2.jpg)
இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் தவிர்த்து எஞ்சிய 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்றம் விசாரித்தால் மேலும் தாமதமாகும் என்பதால் அங்கிருந்து வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அதில், வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலாவுக்கு பதிலாக சத்தியநாராயணனை நியமனம் செய்ய பரிந்துரை செய்த நீதிபதிகள், மனுதாரர்கள் வழக்கைத் திரும்பப் பெற அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், மனுவைத் திரும்பப் பெற தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.