Skip to main content

குடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய 18 மின்மோட்டார்கள் பறிமுதல்!

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
motor

 

 

பேராவூரணி பேரூராட்சி 11, 12 ஆகிய வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று முறையிட்டனர்.

இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில், பேரூராட்சிகள் துறை தஞ்சை மண்டல உதவி இயக்குநர் ந.விஸ்வநாதன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, குடிநீர் கண்காணிப்பு குழு தலைவர் பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமிக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று காலை பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில், குடிநீர் திட்ட பணியாளர்கள் யோ.சார்லஸ், செல்வகுமார், ரமேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சந்தானசெல்வம், மின் பணியாளர் இ.கோவிந்தசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் எஸ்.பி.ஜி.சர்ச் ரோடு, ஆர்.சி.சர்ச் ரோடு, கருப்பமனை மெயின்ரோடு, காமான்டி கோயில், வீமநாயகி அம்மன் கோயில் தெரு, மேலத்தெரு, கிழக்கு தெரு உள்ளிட்ட 11, 12 ஆவது வார்டுகளில் வீடுவீடாகச் சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.
 

 

 

இதில் குடிநீர் குழாய் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு, மின்மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதும், தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகளுக்கு பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டு, 18 மின் மோட்டார்கள் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய சுமார் 800 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மு.பொன்னுசாமி, தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் ஆகியோர் கூறுகையில், "வரும் கோடை காலத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். காவல்துறை மூலமாக நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும். கோடையை சமாளிக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்