Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 130 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன! - சிபிசிஐடி விசாரணையில் திடுக் தகவல்கள்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

கடந்த மே 22ஆம் தேதி 100வது நாள் போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து அமைதியாக பேரணியாக சென்றனர். அப்போது பேரணியாக சென்ற போது மக்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும் அறிவித்தார்.

 

 

இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு என 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் துப்பாக்கி சூடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆய்வு செய்து சில தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாவட்ட போலீசார் ஒப்படைக்கவில்லை.

அவற்றை பெறுவதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவற்றை பெற்ற பின்னர் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உண்மை கண்டறியும் சோதனை நடத்துகின்றனர். அதில் தான் போலீசார் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளனரா? என்பது தெளிவாகும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்