
புயலால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஊருக்குள் வந்துவிடாமல் தடுத்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நெடுவாசல் கிராம பெண்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றம் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று அமைச்சரிடம் கூறினார்கள். உடனே நெடுவாசல் மேற்கு அண்ணாநகர் பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும் நெடுவாசல், அணவயல், கரம்பக்காடு, மாங்காடு, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு சுமார் 3300 குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை புதுக்கோட்டையில் இருந்து பாதுகாப்பாக ஏற்றி வர உத்தரவிட்டார்.
தொடர்ந்து கஜா புயல் பாதிப்பால் தோப்புகளையும், மரங்களையும் இழந்து மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி திருச்செல்வம் குடும்பத்தினர் அமைச்சரிடம் கருணை அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். திருச்செல்வத்தின் தந்தை மற்றும் மகன்கள், மகள் ஆகியோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மனு குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.
அதன்பிறகு விழா மேடைக்கு செல்லும்போது.. மேடையின் கீழே நின்ற நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு உள்ளிட்ட பெண்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை நெடுவாசல் பகுதிக்கு வராமல் தமிழக அரசு தடுத்தது. ஆனால் தற்போது புயலால் அத்தனை உடமைகளையும் இழந்து நிற்கிறோம் இந்த நிலையில் மீண்டும் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை உள்ளே நுழைந்துவிடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மரங்கள், விவசாயம், வீடுகளை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு அரசு உதவிகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் கைகளை கூப்பி கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய மண் காக்கப்படும். விவசாயிகள் மீண்டும் எழ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு எற்பட்டது.