சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகரைச் சேர்ந்தவர் திவாகர் (29). இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், நாங்கள் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வகையில் பகுதி நேர வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த வேலையில் ஆர்வம் அடைந்த திவாகர், குறுந்தகவல் அனுப்பிய நிறுவனம் அளித்த வேலையைச் செய்து முடித்தார். அதற்கு ஊத்தத்தொகை கிடைத்துள்ளதாகக் கூறிய அந்த நிறுவனம், இதில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று திடீரென்று ஆசை வலை விரித்தது. அதற்கும் ஒப்புக்கொண்ட திவாகர், அந்த நிறுவனம் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு 3.97 லட்சம் ரூபாய் செலுத்தினார். ஆனால் அதன்பிறகு அந்த நிறுவனத்தாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த திவாகர், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதேபோல், சேலம் அழகாபுரம் புதூரைச் சேர்ந்த தவமணி (39) என்பவரின் அலைப்பேசிக்கும் கடந்த ஏப்ரல் மாதம், ஒரு தனியார் பெயிண்ட் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு முகவர் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், அதன்மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. அந்த குறுந்தகவலில் கொடுக்கப்பட்டு இருந்த இணைய இணைப்பை சொடுக்கியபோது, 7.25 லட்சம் ரூபாய் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதன் பேரில் தவமணியும் அந்தப் பணத்தைச் செலுத்தினார். அதன்பிறகு அந்த நிறுவனம், தவமணியை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டது. இதுகுறித்து தவமணியும் சேலம் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு புகார்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.