
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ஆம் தேதி நடந்த மோதல் சம்பவம் குறித்து திருமணஞ்சேரி சண்முகம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனு நேற்று(15.5.2025) விசாரணைக்கு வந்தபோது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜோஷி நிர்மல்குமார், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் மோதல் சம்பவம் நடந்த இடத்தை ஏன் நேரில் பார்த்து ஆய்வு செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதேசமயம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த 5 ந் தேதி முதல் 7 வரை சம்பவம் நடந்த பகுதி, திருவிழா நடந்த கோயில் பகுதியில் பதிவான வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலையே போலீசார் வீடியோ பதிவுகளை தேடி கடைகள், வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகள் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கே வடகாடு வந்த மாவட்ட ஆட்சியர் அருணா மோதல் நடந்த குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு மூலகாரணமான நிலம், மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.