
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அளவிலான இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்து தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட அவை தலைவர் காமாட்சி, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் மார்கெட் மேரி, பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் , அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், அகரம் பேரூர் கழக செயலா ளர் ஜெயபால் தாடிக் கொம்பு பேரூர் கழகச் செயலாளர் ராமலிங்க சாமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டர். மேலும் இந்த கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மற்றும் திமுக பேச்சாளர் செல்வகுமார் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய ஐ.பி.செந்தில்குமார், “திமுக ஆட்சியில் தான் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சுமார் 7 அரசு கலைக் கல்லூரிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும். விரைவில் தமிழக முதலமைச்சர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைதந்து பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கல்லூரிகளுக்கான கட்டிடங்களை திறந்து வைப்பார்” என்றார்.

அதன்பிறகு பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தாய் மொழியாம் தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. ஓரிரு மாநிலங்களில் மட்டும் பேசப்படும் இந்தி மொழியை திணிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதற்காக தற்பொழுது மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தைக் கண்டிப்பாக எதிர்ப்போம். தமிழ்நாட்டில் தமிழ் மொழி தான் ஆட்சி மொழியாக இருக்கும். இலக்கண இலக்கிய சுவை வாய்ந்த தமிழ் மொழியை அழித்து எந்த ஒரு இலக்கிய மற்றும் இலக்கண வளமற்ற இந்தி மொழியை ஒருபோதும் தமிழ்நாட்டில் யாராலும் திணிக்க முடியாது. மாநில உரிமைகளை கட்டிக்காக்கும் இயக்கமாக திமுக தொடர்ந்து போராடி வருகிறது” என்றார்.
இறுதியாக தமிழன் பிரசன்னா பேசும் போது, “தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கல்விக் கொள்கையை மாற்றி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திணிக்க பல்வேறு வழிகளில் மத்திய அரசு முயன்று வருகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் இதை திமுக அரசு ஒருபொழுதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு உணவு உடை பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்கி கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்பில் பின் தங்கி விடக்கூடாது என்ற முனைப்பில் திமுக அரசு செயலாற்றி வருகிறது” என்று கூறினார்.