
சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு கிளம்பிய சென்னை மாநகர அரசு பேருந்து வண்டலூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மற்றும் சுமார் 6 பயணிகள் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் முதியவர் ஒருவர் இந்த பேருந்தில் ஏறியுள்ளார். அதன் பின்னர் அவர் வலதுபுறம் முதல் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். அந்த இருக்கைக்கு மேற்புறம், ‘மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் இருக்கை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த பேருந்தின் நடத்துநர், முதியவரை நோக்கி, “இங்கே உட்காரக்கூடாது அந்தப்பக்கம் செல்லுங்கள்” என ஒருமையில் கடுமையான வார்த்தையில் கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதியவரைப் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு நடத்துநரும், ஓட்டுநரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். முதியவரை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் தாக்கும் வீடியோ காட்சி சமுக வலைத்தளத்தில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சம்பவமானது இன்று காலை தடம் எண்: 70 சி வழித்தடத்தில் சென்னை, கிளாம்பாகத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு செல்லும் வழியில் வண்டலூர் கேட் அருகே நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.