Skip to main content

மருத்துவ வசதி இல்லாத மலைக் கிராமம்; பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் குழு

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

108 Ambulance team attended delivery of pregnant women

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலைப்பகுதி குன்றி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி பசுவி (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கடம்பூரில் இருந்து துரிதமாக 108 ஆம்புலன்ஸ் குன்றி பகுதியைச் சென்றடைந்தது.

 

அவரை பரிசோதிக்கச் சென்ற அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் விஜய், வீட்டின் உள்ளே நுழையும் போதே பிரசவ வலி அதிகரிக்கவே அங்கேயே தக்க மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயுக்கும் சேயிக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கொடுக்கப்பட்டு பின்னர் மருத்துவ மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் இருவரும் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் செ.விஜய் மற்றும் வாகன ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் மற்றும் குன்றி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

 

இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம், நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், இவரது மனைவி தாரணி (23). தற்போது தாரணி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு தாரணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக மலையப்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 108 ஆம்புலன்ஸ் கரும்புக்காடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது தாரணிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சனஉல்லா வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். 

 

பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் தாரணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது தாரணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுநர் சனஉல்லா ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

 

 

சார்ந்த செய்திகள்