ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும், இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், பணி நிரந்தரம், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு செல்லும் வகையில் ஒவ்வொரு நாளும் தூய்மைப் பணியாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளன. நிரந்தர தூய்மைப் பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாளை மாலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கையில் தீப்பந்தம் ஏந்தி தூய்மைப் பணியாளர்கள் போராட முடிவு செய்துள்ளனர்.