Skip to main content

“உரிமைத் தொகை மூலம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும்” - அமைச்சர் ஐ. பெரியசாமி 

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

 

திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுபட்டி  ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15.5 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார். இந்த  விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, கிழக்கு மாவட்ட பொருளாளர்  சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்றத் தலைவர்  அருணாதேவி கந்தசாமி வரவேற்றுப் பேசினார்.

 

இந்த விழாவில் புதிய நியாயவிலைக்கடையைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கிய பின்பு பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “திராவிட மாடல் ஆட்சி நாயகன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சராசரியாகப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 32 நாட்கள் கூடுதலாகக் கிடைக்கும்படி செய்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 500 கிராம ஊராட்சிகளில் உள்ள பயனாளிகள் பயன்பெறுகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியின் போது மத்தியில் ஆண்ட பா.ஜ.க. அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வண்ணம் அதற்குரிய நிதியைக் கட்டடங்களுக்கும், வடிகாலுக்கும் பயன்படுத்தி  வந்தது. 

 

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அதை நிறுத்திவிட்டு தற்போது பயனாளிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். இப்பகுதியில் உள்ள கிராமங்களின்  குடிதண்ணீர் பஞ்சத்தை போக்க மாபெரும் உறைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தேவர் மலையில் மிகப் பிரம்மாண்டமான பல லட்சம் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு  அவர்களை அழைத்து வந்து அந்த இடத்தைப் பார்வையிட்ட பின்பு இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் செப்டம்பர் 15ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கப்போகிறது. இதன்மூலம் கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் என்றார்.  அழகுபட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் தெருவிளக்கு மற்றும் சாலை வசதி  கேட்டுள்ளார்கள். அவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். தமிழக முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சாலை வசதிக்காக ரூ. 600 கோடி ஒதுக்கியுள்ளார்கள். அதில்  ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஒன்றியத்திற்கு மட்டும் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன். இதன்மூலம் ஆத்தூர் தொகுதியில் மண் சாலைகள் இல்லாத நிலை ஏற்படப் போகிறது என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்