திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள பிரபல பிரியாணி கடையில், 10 பைசா கொடுத்தால் பிரியாணி என அறிவித்து, தன் கடையின் விளம்பரத்திற்காக கரோனா சமூகப் பரவலை உருவாக்கும் வகையில் கூட்டம் கூட்டியதை போலிசார் கண்டுகொள்ளாதது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கரோனா என்னும் பெருந்தொற்றால் லட்சக் கணக்கான உயிர்கள் தமிழகத்தில் பலியாகின. இதனால் 6 மாதங்களாக ஊரடங்கு, பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு என நிலைமை இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஓரளவு ஊரடங்கில் தளர்வு அறிவித்தது அரசு. ஆனாலும் இன்னும் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி என பல்வேறு பாதுகாப்பு முறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி திருமண மண்டபங்கள், அரசியல் கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு நிகழ்சிகளில் 20 பேருக்கு மேல் கூடினாலே வழக்கு, அனுமதி மறுப்பு எனக் கடுமையாக நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.
ஆனால், இதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, 10 பைசா பிரியாணிக்காக கரோனா தொற்றை மறந்து சமுக இடைவெளியில்லாமல், ஒரே இடத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதை, திருச்சி தில்லைநகர் போலீஸ் ஏனோ கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை என்றாலே பிரியாணி பிரியர்களுக்கு பிரியமான நாள், சாதாரணமாகவே ஞாயிற்றுகிழமைகளில் பிரியாணி சமைத்துச் சாப்பிடுபவர்கள்,10 பைசாவுக்கு பிரியாணி என்றால் விட்டு விடுவார்களா? திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று, செல்லாது என ஒதுக்கிய 10 பைசா கொண்டுவரும் முதல் 100 நபர்களுக்கு பிரியாணி என்ற அறிவிப்பு சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் வைரலாக பரவ, கடை முன்பு சுமார் 400க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
எங்கிருந்தோ வீட்டில் எப்போதோ போட்டு சேமித்து வைத்திருந்த 10 பைசாக்களை தேடி எடுத்து பிரியாணி வாங்க சமுக இடைவெளி இல்லாமல் பலர் முகக்கவசம் இல்லாமல் கரோனா குறித்து அச்சம் ஏதுமில்லாமல் வரிசையில் நெருக்கி அடித்து தள்ளி 100 பேரில் ஒருவராகச் செல்ல முயன்றனர். 400க்கும் மேற்பட்டோர் முந்தி அடித்துக் கொண்டு செல்ல, அவ்வழியே வந்த தில்லைநகர் போலீசார் கூட்ட நெரிசலையோ, சமுக இடைவெளி இல்லாததையோ, சமூக பரவலையோ கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் இந்த 10 பைசாகூட கொடுக்காமல், பிரியாணி வாங்க வி.ஐ.பி.போல் சென்று வாங்கிவந்ததுதான் கொடுமை. \
இதில் ஒரு விஷயம் என்னவென்றால் பழையது என ஒதுக்கப்பட்ட 10 பைசாவின் மதிப்பு தற்போது 500 ரூபாய் ஆக 100 பேருக்கு என்ற கணக்கின்படி 50,000 சம்பாதித்து 20,000 செலவு செய்து, 30,000 ரூபாய் லாபம் பார்த்த அந்த 10 பைசா பிரியாணி சூட்சுமம் தெரியாமல் சமுக இடைவெளியின்றி திரண்ட எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்படப்போகிறதோ? காவல்துறை அலட்சியம் குறித்து மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்து, பிரியாணி கடைகளின் இது போன்று உயிரோடு விளையாடும் விளையாட்டை தடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.