Skip to main content

ஓபிஎஸ் குடும்பத்திலிருந்து அரசியலில் குதிக்கும் புதிய முகம்!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

Younger brother of the OPS, O. Raja   also jumped into politics!

 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம். தொடக்க காலம் முதல் அதிமுகவில் இயங்கி வந்த ஓபிஎஸ் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியே அவருக்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.

 

தமிழக முதல்வராக 3 முறையும், துணை முதல்வராக ஒரு முறையும், பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பு, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் என அதிமுகவின் முக்கியத் தலைவராக உயர்ந்தவர் தற்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உருவெடுத்துள்ளார்.

 

கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற போதும், தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சேர்மனாக வெற்றி பெற்றவர் ஓ.பி.எஸ். அதனைத் தொடர்ந்து 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 5 சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி வருகிறார்.

 

அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரரான ஓ.ராஜாவும் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அரசியலில் தனது இருப்பை பதிவு செய்தார். பின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ஆவின், தற்போதைய தேனி ஆவின் தலைவராகவும் ஓ.ராஜா பதவி வகித்து வருகிறார். 

 

இதனால் தமிழகத்தில் பெரியகுளம் நகராட்சி மிகவும் கவனிக்கத்தக்க நகராட்சியாக உள்ளது. இந்த நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் துணைத் தலைவர் பதவியை பிடிப்பதற்கு இந்த முறை அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளவர் ஓ.பி.எஸ்-ன் மூன்றாவது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம். ஹார்டுவேர், பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், முதல் முறையாக தேர்தல் அரசியலில் போட்டியிட உள்ளார். அதற்காக பெரியகுளம் நகராட்சியில் உள்ள 24வது வார்டில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

 

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 24வது வார்டுக்கு வடக்கு அக்ரஹார தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடைசி நேரத்தில் ஓபிஎஸ்-ன் இளைய சகோதரர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் ஓ.ராஜா போல அவர்களது இளைய சகோதரர் சண்முகசுந்தரமும் அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்