மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "மதுரை, இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? எய்ம்ஸ் என்ற ஒரே ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு பா.ஜ.க. இன்னும் தாமதம் செய்துவருகிறது. ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்கினால்தான் எய்ம்ஸ் கட்டும் நிலை உள்ளதா? பிற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூபாய் 400 கோடி வரை ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ரூபாய் 12 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. தி.மு.க. செய்த திட்டங்களை நான் பட்டியலிட்டது போல் அ.தி.மு.க. செய்த திட்டங்களைச் சொல்ல முடியுமா? தமிழகத்தில் பா.ஜ.க.வும், அதன் கூட்டணியும் வெற்றிபெறப் போவதில்லை.
மதுரையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி மாவட்டத்தைப் பலப்படுத்தியது தி.மு.க. தான். இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்த எந்தத் திட்டங்களும் நிறைவடையவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இரும்புக் கரம் கொண்டு சட்டம்- ஒழுங்கு காக்கப்படும். சட்டம்- ஒழுங்கை தி.மு.க. காக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் பழைய மருத்துவமனைக்குப் பச்சை சாயம் பூசுகிறார்கள். பச்சை சாயம் பூசி அம்மா மினி கிளினிக் என மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர்" எனக் குற்றம்சாட்டினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.