அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இடம் பெற்றிருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்று கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் பலரும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ''நான் அவரை நல்ல அறிவாளி என்று நினைத்தேன். நல்ல அதிகாரி என்று நினைத்தேன். காந்தி படமே ரூபாய் நோட்டில் இருக்கக்கூடாது என்பது எங்கள் கோட்பாடு. காரணம் ஊழலுக்கு எதிராக, லஞ்சத்திற்கு எதிராக, கொலை கொள்ளைக்கு எதிராக இருந்தவர் காந்தி. ஆனால் கூலிக்கு கொலை செய்பவனுக்கு காசு கொடுக்கும் பொழுது காந்தி சிரித்துக்கொண்டே ரூபாய் நோட்டில் அவனிடம் போகிறார். காந்தி மதுக்கடைக்கு எதிராக இருந்தார். ஆனால் மது கடையில் மது வாங்க போகும்போது காந்தி படம் பொறித்த ரூபாய் நோட்டை தான் கொடுக்கிறார்கள். தவறான முறையற்ற தொடர்புக்கு செல்பவர்கள் கூட இந்த காசை தான் கொடுக்கிறார்கள். அதில் லட்சுமி படத்தையும், விநாயகர் படத்தையும் போட்டால் எப்படி இருக்கும். வணங்கப்படுகின்ற தெய்வங்களை எப்படி ரூபாய் நோட்டில் பொறிப்பது. நான் ஐம்பதாயிரம் தருகிறேன் இவன கொலை பண்ணிவிடு என்றால் அந்த கொலைக்கு துணை போகுமா லட்சுமி... சொல்லுங்கள். ஊழல் லஞ்சம் பெறுபவனிடம் லட்சுமியும், விநாயகரும் துணைக்குப் போவார்களா'' என்று ஆவேசமானார்.