நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், வடசென்னை - கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ. மணி, ஆரணி - எம்.எஸ். தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம். செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ. ராசா, வேலூர் - கதிர் ஆனந்த், கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண் நேரு, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சீறுகனூரில் நடைபெற்று வரும் பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் துரை வைகோ பேசுகையில், “இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு சிறந்த தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் மூலம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள்ளது. இந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்தியில் இந்தியா கூட்டணி அமைந்த பிறகு குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். பொது சிவில் சட்டம் அமலுக்கு வராது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி ஊதியமாக 400 ரூபாயாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவிற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மகளிர் உரிமைத் திட்டதை நிறைவேற்ற முடியுமா என்று ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே பல சிறப்பு வாய்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் நிறைவேற்றியுள்ளார். மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்துவிடக் கூடாது. அவ்வாறு அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானதாக இருக்கும். ஆளுநர் மூலம் சிக்கலை ஏறபடுத்துவார்கள். இந்த தேர்தல் நீதிக்கும் - அநீதிக்கும் எதிரான போர். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட பா.ஜ.க.வை வீழ்த்த கூட்டணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்கித் தந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.