
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் தொண்டர்களின் தீர்ப்பு இ.பி.எஸ்.க்கு தான் என அதிமுக முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாமக, மதிமுக இரு கட்சிகளுக்கும் தேர்தல் அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. 98 ஆம் ஆண்டில் அதிகமான வாக்கு வாங்கி உள்ள கட்சியாக தமிழகத்தில் அதிமுக தான் இருந்தது. அவர்கள் கட்சிக்கூட்டங்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக நம்மால் தான் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் அங்கீகாரம் என்று கொடுத்தது அதிமுக தான். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு எல்லாம் அங்கீகாரத்தைப் பெற்று தந்தது அதிமுக. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. அதை அவர்களும் மறுக்க முடியாது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை நாட்டிற்கு அடையாளம் காட்டிய கட்சி அதிமுக தான். எம்.ஜி.ஆர் முதன்முதலாக ஆட்சிக்கு வரும்பொழுது சாத்தூர் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து இரண்டாவது முறை வெற்றி பெற்ற பிறகு அமைச்சராக அவர் வருவதற்கு ஜெயலலிதா தான் காரணம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அமைச்சராகப் பரிந்துரை செய்தவரே ஜெயலலிதா தான்.
செய்தியாளர்கள் சந்திப்பை அதிகமாக நிகழ்த்துவது அண்ணாமலை தான். நாள் முழுவதும் ஊடகங்களில் வருகிறார் என்றால், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை வாடிக்கையாகவும் வழக்கமாகவும் வைத்துள்ளார் .அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி அடுத்தவர்கள் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது.
தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சி தான் நடைபெறும். எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராகப் பதவியேற்பார். இதைப் பொறுக்காமல் அதிமுகவைப் பிளவுபடுத்துவதற்காக சில தீய சக்திகள் முயற்சிக்கிறது. ஆனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 98 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
தீர்ப்பு இன்று அல்லது நாளை வரலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் சரி, தேர்தல் தீர்ப்பு வந்தாலும் சரி, மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் தீர்ப்பு என்ன என்று கேட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்குத் தான். தீர்ப்பு வருவதற்கு முன்பே அதைப் பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது. தீர்ப்பு வரும் வரை பொறுப்போம். தீர்ப்பு நியாயத்தின் பக்கம் தான் வரும். எந்தப் பக்கம் அதிகமாக மெஜாரிட்டி இருக்கிறது என்பது நாட்டிற்குத் தெரியும். அதை மனதில் வைத்து தான் தீர்ப்பு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.