ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தென்னரசு போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சியில் மேனகா, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஆனந்த் உட்பட மொத்தம் 80 பேர் களத்தில் உள்ளார்கள்.
இந்த இடைத்தேர்தல் போட்டியிலிருந்து அமமுக விலகிய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''இடைத்தேர்தல் பணிகளுக்காக பத்து பதினைந்து நாட்களாக வேட்பாளர் அறிவிப்பு, நாமினேஷன் என துணை பொதுச்செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் சென்று வேலையை ஆரம்பித்து விட்டார்கள். தேர்தல் ஆணையம் எங்களுக்கு குக்கர் சின்னம் தரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், குக்கர் சின்னம் தர மறுத்த கடிதம் எங்களுக்கு ஏழாம் தேதி தான் வந்தது. தேர்தல் ஆணையம் இந்த முறை குக்கர் சின்னத்தை கொடுக்கும் என நம்பியிருந்தோம். ஏனென்றால், குக்கர் சின்னம் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட சின்னம். எனவே, சட்டமன்றத் தேர்தலில் அந்த சின்னம் தான் வேண்டும் எனக் கேட்டு இருந்தேன். அதையே அவர்களும் கொடுத்திருந்தார்கள். இந்த இடைத்தேர்தலுக்கும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், கொடுக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பாகவே பதில் அனுப்பி இருந்தால் உச்சநீதிமன்றம் சென்றிருக்க முடியும். உச்சநீதிமன்றம் உறுதியாக எங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்து போட முடியாது. ஓபிஎஸ்-ம் கையெழுத்து போட முடியாது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு மட்டும்தான் கையெழுத்து போட முடியும் என்று சொல்லிவிட்டார்கள். நாளைக்கு உச்சநீதிமன்றம் தமிழ்மகன் உசேன் தான் நிரந்தரமாகக் கையெழுத்திட முடியும் என்று சொல்லிவிட்டால் எடப்பாடி பழனிசாமி கதி என்னவாகும் என்று தெரியாது. இந்த ஒரு தேர்தலுக்கான ஒரு இடைக்காலத் தீர்ப்பு தான் இது. எடப்பாடி பழனிசாமி தலையீடு இருக்கும் வரை தமிழ்நாடு முழுவதும் அச்சின்னம் செல்வாக்கை இழக்கும். அதை ஒரு பிராந்தியக் கட்சியாக எடப்பாடி பழனிசாமி கொண்டு போய்விட்டார்'' என்றார்.