தமிழக முதல்வரைக் கண்டித்து அகில் இந்திய வ.உ.சி. பேரவை திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வ.உ.சி. பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு எல்லாரும் நாங்க தான் வேளாளரும் நாங்க தான் என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எடப்பாடி அரசுக்குத் தோல்வியே ஏற்படும் என்று வ.உ.சி. பேரவையின் பெண்கள் அணி பிரிவைச் சேர்ந்த மீனா கோஷம் எழுப்ப, தங்களுடைய ஓட்டு எடப்பாடி அரசுக்கு இல்லை என்றும் உறுதிப்படத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் வ.உ.சி. பேரவை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கட்டுப்பாடுகளையும் மீறி சாலையில் அமர்ந்தனர். இதனை காவல்துறையினர் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசுக்கும் வ.உ.சி. பேரவை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி சுமார் 50க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தப்பித்து ஓடிய காட்சி திருச்சியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காவல்துறை வ.உ.சி. அமைப்பினரை விரட்டி பிடித்து கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட வ.உ.சி. பேரவையைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்ய பெண் காவலர் முயன்றபோது, அவர் மீது கையில் வைத்திருந்த மது பாட்டிலைக் கொண்டு தாக்க முற்பட்டனர். இதனால் காவல் துறையும் தங்களுடைய வேகத்தைத் துரிதப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்துள்ளது.