விவசாயிகள் விஷயத்தில் காங்கிரஸ் என்ன கொண்டு வந்ததோ அதுதான் இன்னும் நடைமுறையில் இருக்கிறது என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகை முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்கிறேன் ஆனால் காங்கிரஸ் கட்சி எனக்கு கல்லறை தோண்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவின் பாரம்பரியமிக்க வரலாற்று சிறப்புமிக்க ஜனநாயகத்தை வெளிநாட்டு மண்ணில் போய் ஒருவர் தரக்குறைவாக பேசுகிறார் என ராகுல் காந்தியை குறிக்கும் வகையில் பேசுகிறார். இது இரண்டுமே வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் எந்த வளர்ச்சியை பாஜக கொண்டு வந்துள்ளது என சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன். மன்மோகன் சிங் காலத்தில் இருந்த உள்நாட்டு உற்பத்தியை விட தற்போது 2% குறைந்துள்ளது. அது வளர்ச்சியா வீழ்ச்சியா என மோடி சொல்ல வேண்டும். எங்களிடமிருந்து ஆட்சியை அவர்கள் பெற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாய். சிலிண்டரின் விலை 400 ரூபாய். இன்று பெட்ரோல் 100 ரூபாய். சிலிண்டர் விலை 1000 ரூபாய். இதனால் இந்தியா வளர்ந்துள்ளதா வீழ்ந்துள்ளதா. மன்மோகன் சிங் காலத்தில் கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் 108 டாலர். இன்று 70 டாலருக்கும் குறைவு. அப்படியென்றால் பெட்ரோலையும் சிலிண்டரையும் 50% விலை குறைத்து வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வாழ்வாதாரத்தை தருவேன் என சொன்னார். முதன்முதலில் விவசாயிகளின் விலை பொருளுக்கு நியாயமான விலை கொடுத்தது காங்கிரஸ் தான். இந்திரா காந்தி தான் கொண்டு வந்தார். பசுமைப் புரட்சி திட்டத்தின் மூலம் உற்பத்தி பொருளுக்கு விலை நிர்ணயம் செய்தார்கள். அப்படி செய்யும் போது உற்பத்தி செலவு மற்றும் 50% லாபம் என விதித்து கொள்முதல் விலையை அரசு அறிவித்தது. அதுதான் இன்றும் நடைமுறையில் உள்ளது. இது மேலும் வளர்ந்திருக்க வேண்டும் என சொன்னால் மோடி என்ன செய்திருக்க வேண்டும். உற்பத்தி செலவுடன் 100% லாபம் என அறிவித்து இருந்தால் அவர்கள் வளர்ந்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்யவில்லை. நாங்கள் என்ன நிர்ணயித்தோமோ அதுதான் இன்றும் நடக்கிறது. எப்படி விவசாயிகள் அதைவிட மேம்பட்டு இருக்க முடியும். குறிப்பிட்டு சொல்ல முடியாத எந்த துறையிலும் வளர்ச்சியை கொடுக்காமல் நாட்டின் பிரதமர் தவறான தகவல்களை சொல்வது சட்டப்படி குற்றம்” எனக் கூறினார்.