அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அமலாக்கத்துறையில் தரப்பிலிருந்து அவரை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜரானார்.
இந்த விசாரணையில், நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது எனக் கேட்டார். காலை தொடங்கி இரவு வரை நடந்த சோதனையின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அமலாக்கத்துறையினர் நடந்து கொண்ட விதம் ஆகியவை குறித்து அவர் சுருக்கமாக எடுத்துரைத்தார். இதன்பின் அமலாக்கத்துறை கொடுத்த மனு நகல் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினர் கொடுத்த மனு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினார். அதனையடுத்து மனுவை கையொப்பமிட்டு பெற்றுக்கொள்ளும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டார். இன்று செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்ற மனுவும், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையினரின் மனுவும் விசாரிக்கப்பட்டது.
விசாரணையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை 8 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்றிலிருந்து 23 ஆம் தேதி மாலை வரையிலான 8 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஜூலை 23 ஆம் தேதி மாலை செந்தில் பாலாஜியை காணொளி வாயிலாக ஆஜர்படுத்த நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக செந்தில் பாலாஜியை மருத்துவமனையிலேயே வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்றும் விசாரணையின் போது ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தாசரிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையில், காவேரி மருத்துவமனையில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலை மற்றும் அவரது சிகிச்சைக்கு எந்த இடையூறும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும் என்றும் மூன்றாம் தர விசாரணையை பயன்படுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ மிரட்டவோ அச்சுறுத்தவோ கூடாது என்றும் காவலின்போது மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரை பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.