அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஆவின் நெய் விலை மட்டுமல்ல இந்த ஆட்சி வந்ததிலிருந்து எல்லா விலையும் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆவின் பொருட்கள், துணைப் பொருட்கள் அத்தனைக்கும் விலை ஏற்றிவிட்டார்கள். பால் விலையைக் கூட்டியது மட்டுமல்ல பால் பொருட்களுடைய விலைகளையும் ஏற்றிவிட்டார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 'வரியைக் குறைப்போம் வசதியைப் பெருக்குவோம்' என்றார்கள். வரியை சொன்னபடி குறைக்க கூட வேண்டாம் கூட்டாமல் இருந்தாலே போதும்.
இவர்கள் ஆட்சியில் மின்சாரமே வராது; அது வேற விஷயம். இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நான் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது மீண்டும் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றினோம். தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நிலையை உருவாக்கினோம். இப்பொழுது ஆங்காங்கே மின்தடை ஏற்படுவதோடு மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதே முதல்வர் 'மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக்கடிக்கும் இப்பொழுதெல்லாம் மின்சாரக் கட்டணத்தைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது' என்று பகடி பேசினார். ஆனால் தற்பொழுது அவர்களது ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை மின் கட்டணத்தை ஏற்றிவிட்டு இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் 6 சதவிகிதம் உயரும் என ஒட்டுமொத்தமாகத் தெரிவித்துள்ளனர். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொங்கலுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இப்பொழுது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின், வருகிற பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்'' என்றார்.