அவதூறு பரப்பி நாளையே கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறியில் பாஜக 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்வதாக அமைச்சர் உதயநிதி கடுமையாகச் சாடியுள்ளார்.
தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டதை வைத்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, அதில் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில மாநாட்டையொட்டி, இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் & கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்குகிற நிகழ்வு ஆகியவற்றில், தேனி - விருதுநகர் - நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த வாரம் பங்கேற்றோம். செல்லும் இடமெல்லாம் கழக இளைஞர்களின் உற்சாகம், மூத்த முன்னோடிகளின் வாழ்த்து ஆகியவை ‘இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.வும் ‘ஏமாற்று அரசியல்’ செய்யும் அ.தி.மு.க.வும் 2024 மக்களவைத் தேர்தலில் வீழப் போவதை உறுதி செய்தன. போலி அரசியலை வீழ்த்தி, மாநில உரிமையை உயர்த்திப் பிடிக்க அயராது உழைப்போம்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி -மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்' என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது. தங்களின் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்வதுதானே சிறந்த அரசியலாக இருக்க முடியும். அந்தக் கொள்கைப் பயணத்தில் இளைஞர்களைக் கொள்கை ரீதியாக வளர்த்தெடுத்து, அவர்களைத் தலைவர்களாக உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தி, அவர்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி என அது ஒரு நீண்ட நெடிய பயணம்.
அதைத்தான் பெரியார் - அண்ணா - கலைஞர் போன்றோரெல்லாம் பின்பற்றிச் சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலைக் கையிலெடுத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நம் தலைவர் அவர்கள் இன்று கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தி வருகிறார். ஆனால், 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி நாளையே கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள் தான்” என்று 8 பக்கங்கள் கொண்ட நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.