Skip to main content

“உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று ஜெயித்திருக்கிறோம்” - பேச்சு வார்த்தைக்குப் பின் அண்ணாமலை! 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

"We have won the local elections alone" - Annamalai

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் இடப்பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  

 

இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எங்களைப் பொறுத்தவரை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆளும் கட்சி செய்யும் தவறுகளை அதிமுக தலைமையிலே மக்கள் மன்றத்தில் வைத்து நிறைய கேள்விகள் கேட்டு அதன்மூலம் திமுக அரசு அதனை சரி செய்து கொள்ளும் விதமாக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக பங்காற்றி வருகிறது. 4ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. தற்போது பேச்சு வார்த்தை முடித்துள்ளோம்; இன்னும் தொடரும். இதில் பின்னடைவு சிக்கல் என்பது எல்லாம் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்பது ரொம்ப சிக்கலான காரியம். 

 

அதிமுக தலைமையிலான வலுவான எதிர்க்கட்சி தலைமையிலான கூட்டணி, திமுக அரசின் மீது மக்கள் மன்றத்தில் அதிருப்தி இருக்கிறது அவற்றை எல்லாம் மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லவேண்டும். அதேபோல், இந்தத் தேர்தல் பரப்புரை பல கட்டுபாடுகளுடன் இருக்கப்போகிறது. அதனால், ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து நிறுத்த வேண்டும். அதேபோல், மாவட்டத் தலைவர்களிடம் கலந்து பேச வேண்டும். நாம் ஒரு கருத்து சொல்லுவோம்; பெரிய கட்சியான அதிமுக அவர்கள் ஒரு கருத்தை வைத்திருப்பார்கள், மாவட்டத் தலைவர்களுடன் பேசிதான் அவர்கள் அறிவிக்க முடியும். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. 

 

இத்தனை சதவீதம் வேண்டும், இத்தனை எண்ணிக்கை வேண்டும் என கோரிக்கை எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நிறைய இடங்களில் பாஜக வலுவாக உள்ளது. இதற்கு முன்னதாக 2011ஆம் ஆண்டும் தனித்து நின்று ஜெயித்திருக்கிறோம். கூட்டணியிலும் ஜெயித்திருக்கிறோம்.” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்