தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் தொடங்கிவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் மாநகர, நகர, பேரூராட்சி வார்டுகள் யாருக்கு எத்தனை என பிரித்துக்கொள்ளுவதற்கான ஆலோசனை அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது.
அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக உட்பட சில கட்சிகள் உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் பாஜக, தமாக நிர்வாகள் தங்களுக்கு இந்தந்த வார்டு வேண்டும் என பட்டியல் தந்துள்ளனர். அந்த பட்டியல்களை வாங்கிய அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலும் கண்டுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிமுகவினர் சிலரிடம் கேட்டபோது, சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைய பாஜக தான் காரணம். அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்விக்கு காரணமும் பாஜகவோடு கூட்டணி அமைத்தது தான்’ என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாளை அதிமுக வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிடவுள்ளது என்கிற தகவலால் பாஜக, தமாக உட்பட அதோடு கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.