ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தமிழக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 'எப்படியோ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது' என்ற டோனில் தற்பொழுதுதான் பிரச்சாரக் களத்தில் இறங்கி உள்ளது அதிமுக.
இந்நிலையில் ஈரோடு வைராபாளையத்தில் அனுமதியின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்தியதாக புகார் வந்ததை அடுத்து தேர்தல் அதிகாரிகள் திடீரென மண்டபத்தில் சோதனை நடத்தினர். மேலும் மண்டபத்தில் பணப் பட்டுவாடா நடந்ததாக வந்த புகாரையும் சேர்த்து ஆய்வு மேற்கொண்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.
முதலில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை அதிமுகவினர் தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக அதிமுக பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று மாலை நடக்க இருந்த நிலையில் அதற்கான ஆட்களை திரட்ட பணப் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதன் பேரில் உதவி தேர்தல் ஆணையர் மற்றும் பறக்கும்படையினர் மண்டபத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட முற்பட்டனர்.
இதனால் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அனுமதி பெறாமல் இத்தகைய கூட்டங்களை நடத்துவது தவறு என்று கூறி அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை வெளியில் அனுப்பி மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.