அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் வீடுகளில் தனித்தனியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவின் மூலமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தலைமை கழகத்தில் நடைபெற்றது தான் கலந்தாய்வே தவிர மற்றபடி வேறு எந்த கருத்தும் இல்லை. கழகத்திற்கு ஒற்றைத் தலைமை வேண்டும், அது காலத்தின் கட்டாயம், இன்றைய தேவையாக இருக்கிறது என்பது எங்களைப் போன்றவர்கள் பேசுகின்ற கருத்து மட்டுமல்ல. சாதாரண உறுப்பினர்கள் தொடங்கி ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கக்கூடிய நிர்வாகிகள் அனைவரும் கழகத்திற்கு ஒற்றைத் தலைமை தேவை என்கின்ற கருத்தோடு இருக்கிறார்கள். அதுகுறித்து தலைமை கழகத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது. கொள்கை ரீதியாக ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்கின்ற கருத்துக்கு ஆதரவு மிகுந்திருக்கிறது. இதில் மூத்த கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள். உட்கட்சி நடவடிக்கை வெளியே பேசுவது தேவை இல்லாத ஒன்று. பொறுத்திருந்து பாருங்க 23 ஆம் தேதி நல்ல செய்தி கிடைக்கும்'' என்றார்.