தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27- ஆம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா மற்றும் சில அரசியல் கட்சியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை அதிமுக சந்தித்தது. அதில் பாமக கட்சிக்கு அதிக இடங்கள் கொடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புத்தாண்டை முன்னிட்டு திண்டிவனத்தில் பாமக சிறப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த சிறப்புக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசும் போது, 'அதிமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு போதிய ஒதுக்கீடு தராதது வருத்தமளிக்கிறது. எதிர்வரும் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், பாமக கட்சி சார்பில் சில தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளனர். அதில், ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும், தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழகத்தில் இட ஒதுக்கீடு அளவை அதிகரிக்க வேண்டும், அதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பாமகவுடன் கூட்டணி இல்லை என்றால் இன்று அதிமுக ஆட்சியில் இருக்க முடியாது என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலோடு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பெரும்பாலும் பாமக கட்சி வாக்கு வங்கிகள் இருக்கும் தொகுதிகள். அதோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பாமகவுடன் கூட்டணி இருந்தததால் தான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது என்றும் பாமகவினர் பேசி வருகின்றனர்.