வேலூர் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிவைக்க காரணம் முழுக்க முழுக்க திமுகதான். தேர்தலை தள்ளிவைக்க அதிமுக எந்த முயற்சியையும் செய்யவில்லை. எங்களிடத்தில் மடியில் கனமில்லை. வழியில் பயிமில்லை. உங்களிடத்தில் மடியில் கனமிருந்தது. பயமிருந்தது. தேர்தல் நின்றுவிட்டது. இதுதான் உண்மை. ஸ்டாலின் உண்மை நிலையை அறிந்து பேச வேண்டும். எல்லா ஆதாரங்களும் தேர்தல் கமிஷனிடம் இருக்கிறது. அந்த வழக்கையெல்லாம் நீங்கள் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். எல்லாமே வெளியே வரும். நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார்கள்.
இன்னொன்று சொல்கிறார் ஸ்டாலின். கர்நாடகாவை பார்த்தீர்களா என்கிறார். என்ன நடந்தது கர்நாடகாவில். உங்களோட கூட்டணி கட்சிதான் ஆட்சியில் இருந்தது. உங்களோடு கூட்டணியில் இருந்ததால் அங்கேயும் ஆட்சி போனது. ஆட்சிக்கு வரவும் முடியவில்லை. கூட்டணி ஆட்சியில் இருந்தது. அதுவும் போய்விட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மத்தியிலும், மாநிலத்திலும் தாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று மூட்டை மூட்டையாக பொய்களை அவித்துவிட்டார். பொய்யை பொருந்துகிற மாதிரி பேசிக்கொண்டிருந்தால் உண்மை திருத் திருவென்று முழிக்கும் என்று கிராமத்தில் பேசுவார்கள். பொய்யை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும்போது மக்கள் உண்மையா என்று நம்பக்கூடிய அளவிற்கு பொய்யை மாறி மாறி எல்லா கூட்டத்திலும் சொல்லி அதனால் ஏமாற்றி பெற்ற வெற்றிதான் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி. அது உண்மையான வெற்றி அல்ல.
நான் ஒரு விவசாயி. இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். ஒரு விவசாயிக்கு நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லையா? விவசாயி நாட்டை ஆளக்கூடாதா? கீழே கூட்டத்தில் இருக்கிற ஒரு விவசாயி இந்த நாற்காலியில் உட்கார்ந்தால் என்ன நாற்காலி உடைந்தா போய்விடும். விவசாயி கையெழுத்து போட்டா செல்லாதா? ஸ்டாலின் கையெழுத்துப் போட்டால்தான் செல்லுமா? ஒரு சாதாரண விவசாயி முதலமைச்சரானதை பொருத்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால்தான் அவர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்.
கர்நாடகா மாதிரி நடக்கும் என்று சொல்கிறார். எப்படி நடக்கும். முயற்சி பண்ணி பார்த்தீர்கள். சட்டமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் சபாநாயருக்கு உத்தரவிடுகிறார். சபாநாயகர் எங்களுக்கு உத்தரவு போட்டார். சட்டமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று நாள் குறிக்கப்பட்டு ஓட்டெடுப்புக்கு விட்டார்கள். என்னென்ன செய்தார்கள். எங்கள் மேஜை மீது ஏறி டான்ஸ் ஆடினார்கள். என்னுடைய மேஜை மீது ஏறி எம்எல்ஏ டான்ஸ் ஆடுகிறார். இவர்களெல்லாம் நாட்டை ஆள தகுதியானவர்களா? இவர்கள் கையில் நாட்டை கொடுத்தால் உருப்படியாகுமா?
சட்டம் இயற்றப்படுகின்ற மாமன்றம், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற இடம் சட்டமன்றம். மக்களுக்கான திட்டங்களை கொடுக்கின்ற அந்த மாமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டதால் அதனை நிரூபிக்க நாங்களெல்லாம் அமைதியாக அமர்ந்திருக்கின்றோம். எதிரணியில் இருப்பவர்கள் எந்த அளவிக்கு அராஜகத்தில் ஈடுபட்டார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். சபாநாயகர் என்று பார்க்காமல் அவரது இருக்கையில் இருந்து அவரை கீழே இழுத்துவிட்டுவிட்டு, அந்த நாற்காலியில் அமர்ந்த காட்சி இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏ உட்கார்ந்தாரா இல்லையா.
இப்போது பேசுகிறார்கள் நாங்கள் நினைத்திருந்தால் கலைத்திருப்போம் என்று. ஒருபோதும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது. கட்சியை உடைக்க முடியாது என்றார்.