கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டு பாஜக நான்கு இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்றியது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (03.07.2021) இந்திய பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உடனிருந்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
''தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, மகாபலிபுரம், தஞ்சாவூர் இவையெல்லாம் மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலாத் தலங்கள். இவற்றில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தென் தமிழகத்தில் தற்போது அங்கும் சில தொழிற்சாலைகள் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசியலில் நடக்கின்ற இந்த தேச பிரிவினைவாதம் அல்லது தேசத்திற்கு எதிரான சக்திகள் செயல்பாடு இருப்பதை அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றோம். மொத்தமாக இன்று எங்களது நான்கு எம்.எல்.ஏக்களும் அவரிடத்தில் பல விஷயங்களை தமிழகத்தின் வளர்ச்சிக்காக எடுத்து வைத்துள்ளோம். அதேபோல் நதிநீர் இணைப்பு பற்றி பேசியுள்ளோம். தமிழக பாஜக எம்.எல்.ஏக்களுக்கு அவர் மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்தார்.
2017இல் இருந்து நீட் தேர்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மாணவர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் நீட்டை ரத்து செய்ய முடியாது என திமுகவிற்குத் தெரிந்தும், தேர்தல் அறிக்கையில் அதைக் கொண்டு வந்தார்கள். இன்று நீட்டை நிறுத்த முடியாது என அவர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் ஒரு போலி ஆணையத்தைப் போட்டுள்ளார்கள். நீட் வந்த பிறகு கிராமப்புற மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் கிட்டத்தட்ட 400 பேர் போயிருக்கிறார்கள். சாதகங்களை அந்தக் குழு கேட்கவில்லை அந்தக் குழுவின் சாராம்சத்தைப் பாருங்கள் நீட்டினால் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே கேட்கிறார்கள். நீட்டை ரத்து செய்ய முடியாது என்பதால்தான் சாக்குப்போக்கு சொல்வதற்காகவே இந்தக் குழுவைப் போட்டிருக்கிறார்கள்'' என்றார்.