
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (22.01.2024) மாலை புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.
அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அயோத்தி ராமர் கோயில் திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் அதைப்பற்றி 30 வருடங்களுக்கு முன்பே பேசியுள்ளேன். அதே கருத்து தான் இப்போதும், புதிதாக எந்த கருத்தும் இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்றும் எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார். அதே சமயம் நாளை (23.01.2024) காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.