அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், உச்சநீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மற்ற எதிர்க்கட்சியினரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று வழக்கு போட்டியிருந்தனர். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை மீண்டும் உறுதி செய்து உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்தலாம் என்ற நல்ல தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. தர்மம் வென்றிருக்கிறது. இதிலிருந்து உள்ளாட்சித் தேர்தலை பார்த்து யார் பயப்படுகிறார்கள் என்பது இந்த நாட்டிற்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அதனை மறைப்பதற்கு ஸ்டாலின் பல்வேறு வேஷங்களை போட்டுக்கொண்டிருக்கிறார். அவரது வேஷம் இன்று கலைக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவும், அதிமுக கூட்டணியும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீதம் வெற்றியடையும். அதிமுகவை பொறுத்தவரை கொள்கையில் உறுதியாக இருப்போம். நாங்கள் எப்பொழுதுமே நாடகமாக அரசியலை பயன்படுத்துவதில்லை. உண்மையை சொல்லுவோம். நல்லதை செய்வோம். மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும் அவரிடம், டிடிவி தினகரன் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். அவருடைய கட்சி பலமான கட்சியாக வர வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஏற்கனவே தினகரனை பொறுத்தவரையில் பலமுறை போட்டியிட்டு எங்களிடம் தோல்வியுற்றுள்ளார். தொடர்ந்து மக்கள் அவருக்கு தோல்வியைத்தான் பரிசாகத் தருவார்கள் என்றார்.