தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதில், 2 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் மற்றும் முடநீக்கியல் சாதனம் உள்ளிட்ட உதவி உபகரணங்கள், வாகனங்களை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர், “கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.வினர் விவசாயக் கடனுக்காக சென்றால் அவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்பட்டது. தி.மு.க.வினர் யாருக்கும் விவசாயக் கடன் பெரிய அளவில் கூட வழங்கப்படவில்லை. எனவே அதனை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். இதனால் பயனடைவது அதிமுகவினர் மட்டுமே.
ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால் அவருடைய சொத்துக்களைப் பொறுமையாக கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் போல. கூட்டணிக் கட்சிகளை நாங்களாக வெளியேற்ற மாட்டோம்; பாரிவேந்தர் அப்படி கூறியுள்ளார், அது அவர்களின் விருப்பம்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் மூன்றாவதாக கூட்டணி அமைப்போம் என்று கூறியிருந்தார். எனவே திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை.
எங்களோடு கூட்டணியில் இருக்கக்கூடிய எந்தக் கட்சிகளையும் நாங்கள் வெளியே போங்கள் என்று இதுவரை கூறியதில்லை அவர்களாக முடிவெடுத்துக்கொண்டு எங்களை விட்டு பிரிந்து செல்கின்றனர். வருகின்ற தேர்தலில் யாரோட பெட்டி திறக்கப்படும் என்பதை சற்று பொறுத்திருந்து பாருங்கள். கண்டிப்பாக திமுகவின் பெட்டி திறக்கப்படும்.
அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தாலும் பிரச்சனை இல்லை, பிரிந்தாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. நாங்கள் ஏற்கனவே எங்களுடைய வெற்றியை உறுதிசெய்துவிட்டோம். மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; சற்று பொறுத்திருந்து பாருங்கள்.
எடப்பாடி பழனிசாமி அ.ம.மு.க.வை உள்ளே நுழைய விடக்கூடாது, கொடி கட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால், அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய டி.டி.வி., தி.மு.க.வை நாங்கள் எதிர்ப்போம் என்று பதிலளிக்கிறார். முதலில் அவருக்குப் பதிலளியுங்கள், நாங்கள் எப்போதுமே உங்களுக்கு எதிரானவர்கள்தான். நாங்கள் உங்களைப் பற்றி பேசாமல் உங்களுக்கு எதிரியாக இருக்கிறோம்” என்று கூறினார்.