வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி கடந்த 7ஆம் தேதி புழல் பகுதியில் 'பார்' வசதியுடன் கூடிய கிளப்பைத் திறந்து வைத்ததாகச் செய்திகள் வெளியானது. இந்த செய்தியைக் கடந்த அக்டோபரில் வி.சி.க.வினர் நடத்திய மது ஒழிப்பு மாநாட்டுடன் ஒப்பிட்டு பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் பாவலனை நக்கீரன் வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர், “என்ன பார்... எவன் சொன்னான்? திருமாவளவன் பார் திறந்து வைப்பவரா? வி.சி.க. வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள். வயிற்றெரிச்சல் உள்ளவர்கள், கொள்கை பகைவர்கள், மக்கள் விரோதிகள், துரோகிகள்தான் சமூகவலைதளங்களில் இப்படி எழுதுவார்கள். அவர்கள் எழுதுவதை வைத்து இந்த மாதிரி கேள்வியே கேட்கக் கூடாது” என்று கோபமாக பதிலளித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக முன்பு விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, கடந்த 8ஆம் தேதி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் விளக்கியிருந்தார். அதில் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை புழல் அருகே ‘ஜே கிளப்’ நிறுவனத்தின் சைவ உணவகம், நீச்சல் குளம், பேட்மின்டன் விளையாட்டரங்கம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் ஆகியவற்றை திருமாவளவன் திறந்து வைத்ததாக கூறியிருந்தார்.