Skip to main content

“நான் யானை இல்லை, குதிரை...”- ஐந்து தசாப்தங்களாக பயணிக்கும் ரஜினி

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
rajini birthday special article

‘சார்... ஒரு போஸ்’... இது தென்னிந்தியாவில் ஒலித்த குரல் இல்லை. வட இந்தியாவில் அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஒலித்த குரல். நடிப்பைத் தாண்டி தனது ஸ்டைல் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் ரஜினிகாந்த் எனும் காந்தம். அந்த காந்தத்திற்கு இன்று பிறந்தநாள். இந்த நிலையில் அவர் குறித்து சில விஷயங்கள் பின்வருமாறு காண்போம்....

rajini birthday special article

ரஜினி என்னும் பந்தயக் குதிரை:

“நான் யானை இல்லை, குதிரை...” என தன்னை சொல்லிக்கொள்ளும் ரஜினி அந்த குதிரையை விட அதிக ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கிறார். ஒரு குதிரைக்கு சராசரி ஆயுட்காலமே 25 முதல் 30 ஆண்டுகள் தான். அதிகபட்சம் 35 ஆண்டுகள். ஆனால் இந்த ரஜினி எனும் குதிரை கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள்... அதாவது 50 வருடங்கள் தன்னுடைய ஸ்டைலாலும் துள்ளலான நடிப்பாலும், பன்ச் வசனங்களாலும் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

வரலாற்றில் எப்போதாவது அதிசயம் நடக்கும். அப்படி ஒரு குதிரையின் சராசரி ஆயுட்காலத்தை விட 1760 - 1822 ஆண்டு காலகட்டத்தில் 62 வயது வரை ஒரு குதிரை வாழ்ந்திருக்கிறது. இதை ஆச்சரியமாக பார்க்கும் மனிதர்கள் ரஜினியையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ரஜினி என்னும் குதிரை சிகரெட் பழக்கம் இருந்தும் இன்னும் எனர்ஜியோடு நடித்துக்கொண்டிருக்கிறது. ரஜினியை பந்தயமாக வைத்து சம்பாதித்தவர்கள் ஏராளம். அதில் பயனடைந்தவர்கள் தாராளம். அவரே ஓய்வெடுக்க விரும்பினாலும் கூட அந்த குதிரையை விடாமல் பந்தயத்தில் ஓட வைக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக ரஜினியின் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு சராசரி குதிரையின் வேகம் 88.கி.மீ. ஓடும். ஆனால் ரஜினி என்கிற குதிரை கணக்கிட முடியாத அளவிற்கு ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் இந்த குதிரை அவ்வுளவுதான் வயதாகி விட்டது, இனிமேல் ஒடாது என கிண்டலடித்தனர். அதை எல்லாம் தவிடுபொடியாக்கி இன்றும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறது.  

rajini birthday special article

ரஜினி என்னும் பிராண்ட்:

ரஜினி என்கிற பெயர் தமிழ் சினிமாவில் ஒரு பிராண்ட். ஆம்... சூப்பர் ஸ்டார் ரஜினி என தியேட்டரில் வரும் போது ஒவ்வொரு ரஜினி ரசிகனும் ஆக்ரோஷத்தில் உணர்ச்சிவசப்பட்டு அன்பை வெளிப்படுத்துவான். ஆனால் ரஜினி அல்லாத சினிமா ரசிகனும் அந்த டைட்டில் கார்டுடன் தன்னைப் பொறுத்திக் கொள்வான். ஏனென்றால் கிட்டதட்ட 90-களின் சிறு வயது காலக்கட்டத்தில் அது வாழ்க்கையோடு கலந்திருக்கும். இப்போதும் அந்த டைட்டில் கார்டை தியேட்டரில் பார்த்தால் நம்மை சிறு வயதுக்கு கூட்டி போய்விடும். 

ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் இந்தியா என்று சொன்னால் பெரும்பாலானோரின் பதில்கள் இரண்டு வார்த்தைகளாகத் தான் இருக்கும். ஒன்று மெட்ராஸ். இன்னொன்று ரஜினிகாந்த். அந்தளவிற்கு இவரது படங்கள் நாடு கடந்து சென்று கொண்டாடப்படுகிறது. உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தமிழ் சினிமா நடிகர் இவர்தான் என பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சிறு குழந்தைகள் மூலம் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஒரு நடிகருக்கு அதிக ரசிகர் மன்றங்கள் உண்டு என்றால் அதில் ரஜினிக்கு தான் என சொல்லப்படுகிறது. அதனால் ரஜினி ஒரு பிராண்டாக திகழ்கிறது.  

rajini birthday special article

ரஜினியின் சாதனைகள்:

தமிழ் சினிமாவின் எல்லைகளை உடைத்து பல கதவுகளை ரஜினி படங்கள் திறந்திருக்கிறது. முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்புகளை திறைந்து வைத்தது ரஜினி படம் தான். ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த சிவாஜி படம் அந்த சாதனையை நிகழ்த்தியது. அதன் பிறகு இதே கூட்டணி தான் எந்திரன் படம் மூலம் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்து சாதனை புரிந்தது. இதையடுத்து இதே கூட்டணியில் உருவான 2.0 படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவான தமிழ் படமாக இருக்கிறது. கிட்டதட்ட 570 கோடி என கூறப்படுகிறது. இப்படி ரஜினி ஏகப்பட்ட சாதனைகள் படைத்திருந்தாலும் அவரது சாதனைகளையே பேசி கின்னஸ் சாதனை செய்யப்பட்டிருக்கிறது. நடிகரும் ஆர்.ஜே-வுமான விக்னேஷ்காந்த் தொடர்ந்து 50 மணி நேரம் இடைவிடாமல் பேசி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 

rajini birthday special article

இப்படியாக ரஜினியப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க எவ்வளவோ உள்ளது. இவ்வாறாக அந்த ரஜினி என்னும் பந்தய குதிரைக்கு, ரஜினி என்னும் அந்த பிராண்டிற்கு, சாதனைகளைப் புரிந்த சாதனை நாயகனுக்கு இன்று பிறந்தநாள். இன்றைய இளம் தலைமுறை நாயகன்கள் உடன் போட்டி போட்டு நடிக்கும் அளவிற்கும் இன்னும் உற்சாகமாகவும், கொண்டாட்ட கலைஞனாகவும் மென்மேலும் ரஜினி 74 வயதிலும் மிளிர்கிறார்.

சார்ந்த செய்திகள்