ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தல் களம் அனலைக் கிளப்புகிறது. தி.மு.க.வின் வேட்பாளரான சண்முகையாவை ஆதரித்து கே.என்.நேரு ஆஸ்டின் எம்.எல்.ஏ., கனிமொழி கே.கே.எஸ்.எஸ்.ஆர். கருப்பசாமிபாண்டியன், ஜோயல், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. என்று பதினொன்றுக்கும் மேற்பட்டவர்கள் களமிறக்கப்பட்டதோடு பிரச்சாரங்களையும் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த மூன்று தினங்களாக தொகுதியில் மையமிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாப்பிள்ளையூரணி, முத்தையாபுரம் சிலுக்கன்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் தன் கட்சி வேட்பாளரான சண்முகையாவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற் கொண்டார்.
அப்போது அவர், “தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளை நிறைவேற்றுவதோடு குடி தண்ணீர் உள்ளிட்ட அத்யாவசியப் பணிகளை முடிப்போம்” என்றார்.
தொகுதிக்குட்பட்ட பகுதியான செய்துங்கநல்லூரில் அ.ம.மு.க. வேட்பாளரான சுந்தாராஜை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், “இ.பி.எஸ். ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வளமாக உள்ளனர். மக்களுக்கு எதுவும் செய்வது கிடையாது. ஒட்டப்பிடாரம் பகுதியில் குளங்கள் தூர்வார, குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க, அங்கன்வாடி மையங்களில் சுற்றுச் சுவர் கட்ட, மயானம் செல்ல வசதி, முதியோர் பென்ஷன் கிடைக்க அ.ம.மு.க வசதிகளைச் செய்யும்” என்று வாக்குறுதி கொடுத்து வருகிறார்.
அதேசமயம் அ.தி.மு.க வின் வேட்பாளரான மோகனுக்குப் பக்கபலமாக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜ், சேவூர் ராமச்சந்திரன், மணிகண்டன் என 8 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் அதிமுக வேட்பாளரான மோகனை ஆதரித்து குறுக்குச் சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ், “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இ.பி.எஸ். தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அவர் வழங்கிய எந்தத் திட்டத்தையும் குறைக்கவில்லை. ஜெயலலிதா மேலே இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒழுங்காக அமைச்சர்கள் பணி செய்கிறார்களா? என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று பிரச்சாரத்தில் பேசிவருகிறார்.