தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மின் ஊழியர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், மூங்கில்துறைபட்டு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் ஒரு வார காலமாகவே மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் மூன்று மின் ஊழியர்கள் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியப் பகுதியில் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் வெள்ள நீரில் அடித்துச் சென்றனர். அதில் இருவர் தப்பித்து கரை ஏறினர். ஆனால் அதில் ஒரு மின் ஊழியர் மட்டும் தண்ணீரில் அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த மீட்புப் படையினர் ஆற்றில் அடித்துச் சென்ற மின் ஊழியரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை அவரை கண்டுபிடிக்க முடியாததால் திணறி வருகின்றனர்.