தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சாத்தனூர் அணை திறந்துவிட்டதன் காரணமாக தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் உண்டாகின என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வந்தன.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று (10-12-24) தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. அப்போது, சாத்தனூர் திறக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க ஆட்சியில், செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்து விட்ட காரணத்தினால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டதால்தான் சென்னையே மூழ்கியது.
அப்போது, சுமார் 240 பேருக்கு மேல் உயிரிழந்தனர். ஆனால், சாத்தனூர் அணையை பொறுத்தவரை 5 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் படிப்படியாக திறந்துவிடப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியை அரசு யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டது என சிஏஜி அறிக்கையில் கூட கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்.