தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று (09.12.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. அப்போது, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்படி இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
முன்னதாக, தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசு மீது குற்றம்சாட்டினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பதிலடி தந்தனர். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது!’ என்று நாடாளுமன்றத்தில் அதிமுக செய்த துரோகத்தை அம்பலப்படுத்தி தனது பதிவிட்டார்.
மேலும் அதில் அவர் தெரிவித்ததாவது, “அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது. அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (10-12-24) இரண்டாவது தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திசை திருப்பும் செயலில் திமுக அரசு ஈடுபடுகிறது. உண்மையிலே ஒரு நல்ல அரசாங்கம் முதல்வராக இருந்தால் உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும். நாடாளுமன்றத்தில் தம்பிதுரை என்ன பேசினார் என்பதை நாங்கள் தெளிவாக வெளியிட்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சுரங்க உரிமை கொடுக்கப்பட்டது. யாருக்கு வேண்டுமானாலும் சுரங்கம் கொடுப்பதை தவிர்க்கவே ஏல முறை பற்றி அ.தி.மு.க பேசியது.
ஆனால், அதற்கு மாறாக தான் அவர் செய்தி வெளியிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதமே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய சுரங்க அமைச்சகம் ஒப்பந்தம் வெளியிட்டிருக்கிறது. கடந்த மாதம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு தனியாருக்கு கொடுத்துவிட்டார்கள். 10 மாத காலமாக திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சுரங்கத்தை தடுக்க ஆரம்பத்திலேயே திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அதிமுக மீது குறைகூறி திசைதிருப்பும் செயலில் திமுக ஈடுபடுகிறது” என்று கூறினார்.