Skip to main content

'கல்விக் கடன் தள்ளுபடி, வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி'- தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அ.தி.மு.க.!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021

 

tn assembly election admk manifesto has been released

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கட்சியின் மூத்த நிர்வாகிகள் செம்மலை, கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

tn assembly election admk manifesto has been released

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் பின்வருமாறு; 

'குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும். குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 'அம்மா இல்லம்' என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். கரிசல், களிமண் எடுக்க தடையில்லா அனுமதி வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150  நாட்களாக உயர்த்தப்படும். மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும். 

tn assembly election admk manifesto has been released

பொங்கல் பண்டிக்கைக்கான  உதவித் தொகை திட்டம் தொடரும். மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூபாய் 25,000 மானியம் வழங்கப்படும். மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டப்படும். இந்து ஆன்மீக பயணம், ஹஜ், ஜெருசலேம் பயணத்திற்கான கட்டணம் உயர்த்தி வழங்கப்படும். பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் 10,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும். மாவட்டந்தோறும் மினி ஐ.டி. பார்க் நிறுவப்படும். நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். நெசவாளர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். 

 

ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அமைப்புச்சாரா ஓட்டுநர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். கல்வி, வேலை வாய்ப்பில் அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படும். மாணவர்களின் நலன் காக்க மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 

tn assembly election admk manifesto has been released

9, 10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும். தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தினமும் 200 மி.லி. பால் அல்லது பால்பவுடர் வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமையும், குடியிருப்புக்கான அனுமதியும் தரப்படும். நீலகிரி மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும். புதிய கால்நடை மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்படும். 

 

தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் உள்ள சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூபாய் 5,000 வழங்கப்படும். ஈழத் தமிழர் உள்பட 7 பேர் விடுதலைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 7,500 உழவு மானியம் வழங்கப்படும்' உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்